Saturday, June 7, 2014

ஈகை

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.  - 221

தி.பொ.ச. உரை: பொருள் இல்லாத வறியவர்களுக்குப் பொருளோ உணவோ கொடுத்து உதவுவதே கருணையாகும். இவற்றை மற்றவர்களுக்குக் கொடுப்பதெல்லாம் பலனை எதிர்பார்த்துச் செய்வதாகும்.
=====================================================

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.  -  222

தி.பொ.ச. உரை: மேன்மக்கள் தாமாகவே வந்து நல்லமுறையிலே பொருளைக் / உணவைக் கொடுத்தாலும் அதைப் பெற்றுக்கொள்வது நல்லதன்று. கொடுக்கும் நிலையில் இல்லையென்றாலும் இரந்தவர்க்கு உதவி செய்வதே நல்லது. ( இங்கு மேலுலகம் என்று வள்ளுவர் குறிப்பிடுவது மேன்மக்களை. எந்நிலையில் இருந்தாலும் 'ஏற்பது இகழ்ச்சி' என்பதே இக் குறளின் துணிபாகும். )
===================================================

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.  -  223

தி.பொ.ச. உரை: இல்லை என்று வெறுப்புடன் கூறாமல் இரந்தாரிடத்துக் கருணையுடன் நடந்துகொள்வது நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவரின் பண்பாகும். ( இங்கு எவ்வம் என்பது வெறுப்பினைக் குறிக்கும். அகராதி காண்க. )
=================================================

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.  -  224

தி.பொ.ச. உரை: இரந்தவருக்கு உதவிசெய்து அவரது முகத்தில் மகிழ்ச்சியை உண்டாக்காதவரை பொருளிருந்தாலும் அது இரக்கப்படுவோருக்கு மகிழ்ச்சியைத் தராது.  
====================================================

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.  -  225

தி.பொ.ச. உரை: பசி என்று வந்தவருக்குத் தம் பசியினையும் பொறுத்துக்கொண்டு உணவளித்து உதவுபவரே உலகின் மிகச்சிறந்த வல்லவராம்.
================================================

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.  - 226

தி.பொ.ச. உரை: பொருளற்ற வறியவர்களுக்கு உணவளித்து உதவுவது ஒன்றே பொருளைப் பாதுகாத்து வைக்கும் வழியாகும்.  ( ஏனைய வழிகளில் பாதுகாத்து வைத்தாலும் அவற்றை இழக்க நேரிடும் என்பதே இக் குறளின் துணிபாகும். இங்கு உழி என்பது வழி / நெறி என்ற பொருளில் வந்துள்ளது. இதே பொருளில் குறள் 168 லும் வந்துள்ளது காண்க. )
===================================================

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.  -  227

தி.பொ.ச. உரை: தான் பெற்ற உணவினை வறியவர்களுடன் பகிர்ந்து உண்ணும் பழக்கமுடையவனைக் கடும்பசி என்னும் நோய் ஒருநாளும் நெருங்கமுடியாது.
====================================================

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.  -  228

தி.பொ.ச. உரை: தம் பொருளை வறியவர்களுக்குக் கொடுத்துதவி இன்பமடையத் தெரியாத கொடியவர்கள் அப் பொருளை இழந்து துன்பமே அடைவர்.
================================================

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.  -  229

தி.பொ.ச. உரை: தான் இரந்துபெற்ற உணவினைத் (தன்னிடம் இரந்தவருக்குக் கொடுக்காமல்) தான் மட்டுமே உண்பது, இரந்துபெறுவதைக் காட்டிலும் இழிவானது. ( இங்கு இன்னாது என்பது இழிவானது என்ற பொருளில் வந்துள்ளது. குறள்கள் 857, 894, 923, 995, 35, 230 போன்றவற்றிலும் இதே இழிவுப் பொருளில் வந்துள்ளது காண்க. )
==================================================

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.  -  230

தி.பொ.ச. உரை: ஒருவன் வறுமையினால் இறப்பதைக் காட்டிலும் தன்னிடம் இரந்தவருக்கு உதவிசெய்ய முடியாத நிலையில் இறப்பது மேலானது. ( இங்கும் இன்னாது என்பது இழிவுப் பொருளில் வந்துள்ளது. அதுமட்டுமின்றி இன்னாநாற்பது என்னும் நூலில் இன்னா என்பது இழிவுப் பொருளில் பல இடங்களில் வந்துள்ளதைக் காணலாம். ஆனால் இப் பொருள் அகராதிகளில் ஏனோ காணப்படவில்லை. ) 
=======================xxxxxx========================